சேர்ந்து வாழ மறுத்த மனைவி குத்திக்கொலை; ராணுவ வீரர் கைது

போடி அருகே சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியை குத்திக்கொலை செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-19 18:45 GMT

போடி அருகே சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியை குத்திக்கொலை செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

ராணுவ வீரர்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி, தாத்தப்பசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 42). இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு‌ கற்பகம் (35) என்ற மனைவியும், நிஷா (10), நேத்ரா (6) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

ரங்கநாதனும், கற்பகமும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கற்பகம் தனது வீட்டிலேயே சோப் ஆயில் தயாரித்து, அதனை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் ரங்கநாதன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு இன்று வந்தார். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது மகள்கள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார்.

குத்திக்கொலை

அப்போது தனது மனைவியிடம் பேசிய ரங்கநாதன், ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறினார். ஆனால் அதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கநாதன், வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தினார். கற்பகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கற்பகம் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். வீட்டின் ஒரு அறையில் ரங்கநாதன் பதுங்கி இருந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசாரிடம் பதுங்கி இருந்த ரங்கநாதனை அக்கம்பக்கத்தினர் ஒப்படைத்தனர். விசாரணையில், ரங்கநாதன் தனது மனைவியை குத்திக்கொலை செய்ததாக தெரிவித்தார்.

கைது

இதையடுத்து கற்பகத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கநாதனை கைது செய்தனர்.

சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியை ராணுவ வீரர் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்