கடனை திரும்ப கேட்டு கண்டித்ததால் கூலிப்படையினர் உதவியுடன் கொ.ம.தே.க. நிர்வாகியை தீர்த்து கட்டினோம் கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
பள்ளிபாளையம் அருகே கடனை திரும்ப கேட்டு கண்டித்ததால் கூலிப்படையினர் உதவியுடன் கொ.ம.தே.க. நிர்வாகியை தீர்த்து கட்டியதாக கைது செய்யப்பட்ட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே கடனை திரும்ப கேட்டு கண்டித்ததால் கூலிப்படையினர் உதவியுடன் கொ.ம.தே.க. நிர்வாகியை தீர்த்து கட்டியதாக கைது செய்யப்பட்ட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கொ.ம.தே.க. நிர்வாகி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள். கவுதம் வெப்படையில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கவுதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவி சிலர் காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சங்ககிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட வைகுந்தம் மேட்டுக்காடு கோழிப்பண்ணை அருகில் உள்ள ஏரி பகுதியில் உடலில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கவுதம் பிணமாக கிடந்தார்.
வாக்குமூலம்
இந்த பயங்கர கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடினர். இதையடுத்து கவுதமின் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த குணசேகரன் (29), பிரகாஷ் (27) மற்றும் தீபன் (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைதானவர்கள் ேபாலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
அதில் கவுதமிடம், குணசேகரன் பணம் கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்காமல் இருந்தார். இதையொட்டி கவுதம் பலமுறை பணத்தை திரும்ப கேட்டு கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் தன்னுடன் பணியாற்றும் பிரகாஷ் மற்றும் 6 மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தில் பணியில் இருந்து நின்ற தீபன் ஆகியோருடன் சேர்ந்து கவுதமை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
புதிய கார்
இதற்காக அவர்கள் வெளியூர்களில் இருந்து கூலிப்படையினரை அழைத்து வந்தனர். பின்னர் 10 நாட்களுக்கும் மேலாக திட்டம் தீட்டி கவுதமின் அன்றாட நடவடிக்கையை கண்காணித்து வந்துள்ளனர். மேலும் கொலை சம்பவத்துக்காக புதியதாக கார் ஒன்றையும் 3 பேர் சேர்ந்து வாங்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து புதிய காரில் தீபன், குணசேகரன், பிரகாஷ் மற்றும் கூலிப்படையினர் சென்று கவுதமை கடத்தி குத்திக்கொலை செய்து விட்டு உடலை ஏரிக்கரையில் வீசினர். மேலும் புதிய காரை கூலிப்படையினிடம் கொடுத்து விட்டனர். இவ்வாறு போலீசில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து கைதான 3 பேரையும் போலீசார் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.