வேறுநபருடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளி கழுத்தை நெரித்துக்கொலை-கைதான கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்

வேறுநபருடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளியை கழுத்தை நெரித்து கொன்றதாக கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-08 16:51 GMT

கந்தம்பாளையம்:

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளத்தொடர்பு

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது 52). தொழிலாளியான இவர், ரிக் வண்டி வேலைக்கு ஆட்கள் அனுப்பும் வேலையும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமணி (44). இந்த தம்பதிக்கு தினேஷ், தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர். தினேசுக்கு திருமணமாகி, மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். தருண் தர்மபுரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

செல்வராசுவுக்கும், கருமகவுண்டம்பாளையத்தில், கணவனை பிரிந்து தனியாக வசித்து வரும் சுதா (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இவர்களது கள்ளத்தொடர்பு 8 ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதனிடையே சுதாவுக்கு, வேறு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராசு, சுதாவிடம் கேட்டு வந்துள்ளார். மேலும் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

தொழிலாளி மர்மசாவு

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வராசு, சுதா வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை சுதா, செல்வராசுவின் தந்தையான கந்தசாமியை தொடர்பு கொண்டு, செல்வராசு மர்மமாக இறந்து கிடப்பதாக தெரிவித்தார். இதனை அறிந்த கலாமணி மற்றும் செல்வராசுவின் உறவினர்கள் சுதா வீட்டுக்கு சென்றனர். அங்கு செல்வராசுவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் செல்வராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கலாமணி, செல்வராசுவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரியும் நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து போலீசார் செல்வராசுவின் கள்ளக்காதலி சுதாவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது சுதா, செல்வராசுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

செல்வராசுவுக்கும், சுதாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனிடையே சுதாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை செல்வராசு கண்டித்துள்ளார். இது சுதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் செல்வராசு, சுதா வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு 2 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது செல்வராசு, வேறொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து சுதாவிடம் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செல்வராசு மதுபோதையில் தூங்கிவிட்டார்.

கழுத்தை நெரித்துக்கொலை

ஆத்திரத்தில் இருந்த சுதா, செல்வராசுவை கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் அவர் செல்வராசுவின் வயிற்றில் அமர்ந்து, சேலையால் அவரது கழுத்தை இறுக்கி நெரித்தார். இதில் மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் செல்வராசு பலியானார். இதையடுத்து அதிகாலை சுதா, செல்வராசு மர்மமாக இறந்து கிடப்பதாக கூறி நாடகமாடியுள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் வசமாக சிக்கி கொண்டார்.

இவ்வாறு சுதா தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுதாவை கைது செய்தனர். கந்தம்பாளையம் அருகே வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால் தொழிலாளியை கள்ளக்காதலி கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்