பள்ளிபாளையம் அருகே பயங்கரம்: பெண் கட்டையால் அடித்துக்கொலை வாலிபரிடம் போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் அருகே பெண் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-19 16:46 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே பெண் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). இவருடைய மனைவி மல்லிகா (55). இவர்களுக்கு சண்முகம் (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் கோவையில் கிரில் கேட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் கருந்தேவன்பாளையத்தை சேர்ந்த சின்ராசு என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சின்ராசுக்கு, சண்முகம் பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கருந்தேவன்பாளையத்துக்கு வந்த சின்ராசு, பணத்தை பெறுவதற்காக சண்முகத்தின் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மல்லிகாவிடம் உங்களது மகன் தனக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது என்று கூறினார். பின்னர் செல்ேபானில் சண்முகத்திடம் பேசிய சின்ராசு உனது தாயாரிடம் தனக்கு பணம் கொடுக்க கூறுமாறு கேட்டதாக தெரிகிறது.

கட்டையால் அடித்தார்

அதற்கு சண்முகம் நான் ஊருக்கு வந்த பின்னர் பணம் கொடுப்பது குறித்து பேசி கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதில் உடன்படாத சின்ராசு உனது தாயாரை பணம் கொடுக்க சொல் அல்லது அவரை தாக்குவேன் என்று கூறினாராம். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சின்ராசு அங்கு கிடந்த கட்டையால் மல்லிகாவை அடித்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மல்லிகா மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சின்ராசு அங்கிருந்து ஓடி விட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மல்லிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் இறந்த மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய சின்ராசுவை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்