தர்மபுரி அருகே நிலத்தகராறில்கத்தியால் குத்தி விவசாயி படுகொலைஉறவினர் வெறிச்செயல்

Update: 2023-07-29 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே விவசாயி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் உறவினர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

விவசாயி

தர்மபுரி அருகே பெரியகுரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூஞ்சோலை (வயது 60), விவசாயி. இவருடைய உறவினர் விஸ்வநாதன் (63). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டை ஒட்டி உள்ள நிலத்திற்கு செல்லும் வழித்தட பாதை தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று மாலையில் பூஞ்சோலை அந்த குறிப்பிட்ட வழித்தட பாதையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த விஸ்வநாதன் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

கத்தியால் குத்திக்கொலை

இதனிடையே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஞ்சோலையின் மார்பில் குத்திவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பூஞ்சோலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மதிகோன் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார், பூஞ்சோலையின் உடலை கைப்பற்றி அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பிஓடிய விஸ்வநாதனை போலீசார் நேற்று இரவு பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்