மடத்துக்குளம் அருகே மனைவியின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொலை செய்ய முயற்சி செய்த வட மாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் உயிரிழந்துள்ளார். அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அம்மி கல்லால் தாக்கினார்
மடத்துக்குளத்தையடுத்த பாப்பான்குளம் பிரிவு பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நூர்தீன் ஷேக் (வயது 36) என்பவர் தனது மனைவி ரக்ஷிதா என்பவருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
இடையில் சொந்த ஊருக்கு சென்ற நூர்தீன் ஷேக் மீண்டும் கோழிப் பண்ணைக்குத் திரும்பி வந்துள்ளார்.
ரக்ஷிதாவின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது நூர்தீன் ஷேக் அம்மிக் கல்லால் ரக்ஷிதாவின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
சிகிச்சை பலனின்றி சாவு
இதனையடுத்து ரக்ஷிதாவின் அலறல் சத்தம் கேட்டு கோழிப்பண்ணை மேலாளர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் விரைந்து சென்று பார்த்த போது ரக்ஷிதா தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்துள்ளார். சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் நூர்தீன் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ரக்ஷிதா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.