திருப்பூரில் கோவில் பூசாரியை எரித்துக்கொலை செய்த கொடூர கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவில் பூசாரி
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு வி.பி.சிந்தன்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 72). இவருடைய மனைவி பார்வதி (65). இவர்களுக்கு கவுரி (48) என்ற மகளும், கருப்பசாமி (38) என்ற மகனும் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சுப்பிரமணி வெங்கமேடு-ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார் கருப்பராயன் கோவிலில் 9 ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வந்தார்.
மேலும் கடந்த ஒரு ஆண்டாக அவர் கோவிலிலேயே தங்கி பூஜை செய்து வந்தார். இந்த நிலையில் சுப்பிரமணியின் மகள் கவுரி கோவிலை சுத்தம் செய்வதற்காக நேற்று காலை 6.30 மணிக்கு சென்றார். அங்கு சுப்பிரமணி இல்லை. கோவில் வளாகத்தில் ரத்தக்கறை இருந்துள்ளது.
கரிக்கட்டையாக...
இதனால் அதிர்ச்சியடைந்த கவுரி கோவிலின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது சுப்பிரமணி எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கிடந்தார். இதனால் பதறிப்போன கவுரி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், தெற்கு துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர்கள் அனில்குமார், ராஜன், அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சுப்பிரமணி கரிக்கட்டையாக கிடப்பதை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். மேலும் சுப்பிரமணி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் 'ஹண்டர்' வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த கோவிலில் இருந்து அங்கேரிபாளையம் வெங்கமேடு சாலை வரை ஓடிய 'ஹண்டர்' யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
ரத்தக்கறை
இதையடுத்து போலீசார் பூசாரி சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சுப்பிரமணிக்கு அவருடைய மகள் கவுரி வழக்கம் போல உணவு கொடுத்து சென்றுள்ளார். இதே போல் இரவு 10.30 மணிக்கு முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கோவிலில் சுப்பிரமணி படுத்திருப்பதை பார்த்துள்ளார். ரத்தக்கறை படிந்திருந்த இடத்தில் கோவிலில் இருந்த துளசிமாடம் உடைந்து கிடந்தது.
4 தனிப்படை
எனவே கொலையாளிகள் சுப்பிரமணியை துளசிமாடத்தை வைத்து அடித்திருக்கலாம் என்றும், பின்னர் உடலை பின்புறமாக இழுத்து சென்று எரித்துக்கொன்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளியை பிடிக்க அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி, 15 வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் கோவில் பூசாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.