மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட தொழிலாளி குத்திக்கொலை

Update: 2022-11-11 15:42 GMT


திருப்பூரில் மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட தொழிலாளியை குத்திக்கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட தொழிலாளி

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 33). இவருடைய மனைவி ராணி (32). இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பிரவீன் கட்டிட வேலை செய்து வந்தார்.

கடந்த ஒரு ஆண்டாக திருப்பூர் மாஸ்கோ நகர் துவாரகை நகர் 3-வது வீதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு அருகே கட்டிட தொழிலாளியான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த அண்ணாமலை (39) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

கத்திக்குத்து

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை, பிரவீனின் மனைவி குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் அண்ணாமலைக்கும், பிரவீனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி பிரவீன், அண்ணாமலை வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அண்ணாமலை வீட்டில் இல்லை.

அதன்பிறகு நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு 9 மணி அளவில் வாய்த் தகராறு முற்றவே, அண்ணாமலை, தான் வைத்திருந்த கத்தியால் பிரவீனின் நெஞ்சில் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பிரவீன் சரிந்தார்.

தொழிலாளி கைது

உயிருக்கு போராடிய பிரவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு பிரவீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது மனைவி ராணி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

கட்டிட தொழிலாளியை பக்கத்து வீட்டுக்காரர் குத்திக்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்