நகராட்சி ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

ஆம்பூரில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.

Update: 2022-09-13 18:16 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 29). இவருக்கும் ஆம்பூர் பகுதியை சேர்ந்த குமாரிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்பொழுது குமாரி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் ஜெயராஜ் தனது மனைவி பிரசவத்திற்காக ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

பின்னர் ஆம்பூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி அளவில் உடல் வலி காரணமாக வெந்நீர் தயாரித்து உடலுக்கு ஒத்தடம் கொடுத்தாராம்.

அந்தத் தண்ணீரை மாடியில் இருந்து தெருவில் ஊற்றியுள்ளார். அப்போது அங்கு சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பியில் தண்ணீர் பட்டதில் தெறித்து இவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் மயங்கி விழுந்தார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவல் பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து ஜெயராஜை மீட்டபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. அங்கு வந்த ஆம்பூர் டவுன் போலீசார் ஜெயராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்