சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகள், கோவில் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரப் பணிகள் மற்றும் தற்காலிக குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் இடங்கள் ஏற்கனவே உள்ள சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அப்போது சுகாதார பணிகளை திருவிழா நாட்களில் முழு நேரமும் கண்காணித்து குப்பைகள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும், தற்காலிக குடிநீர் வசதி பொதுமக்கள் வசதிக்காக உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். தற்காலிக குடிநீர் டேங்குகளில் குடிநீர் இருப்பை அடிக்கடி ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஏற்கனவே உள்ள சுகாதார வளாகத்தை ஆய்வு செய்த தலைவி, சுகாதார வளாகத்தை நிர்வகித்து வருபவர்களிடம் அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் விழா காலங்களில் பொதுமக்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
ஆய்வின் போது ஆணையாளர் சபாநாயகம், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.