பவானி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு: கருப்பு சட்டை அணிந்து தரையில் உட்கார்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா- அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை
பவானி நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து தரையில் உட்கார்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி
பவானி நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து தரையில் உட்கார்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவசர கூட்டம்
பவானி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தலைமை பொறியாளர் கதிர்வேலு, துப்புரவு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 24 கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விவாதம்
கூட்டத்தில், 'பவானி நகராட்சிக்கு உள்பட்ட 27 வார்டுகளில் சேரும் குப்பைகளை அகற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் நகரில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியார் மயமாக்குதல் குறித்த தீர்மானம் மற்றும் இதற்காக 63 பேர் தேர்வுசெய்யப்பட்டு உள்ளதாகவும், இவர்களுக்காக மாத சம்பளமாக 10 லட்ச ரூபாய் சம்பளம் வழங்குவது குறித்த தீர்மானமும் விவாதத்துக்கு வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எல்லா முடிவுகளையும் நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக எடுக்கிறது என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கருப்பு சட்டையில்...
விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது நகராட்சி தலைவரின் இருக்கைக்கு முன்பாக 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சிவக்குமார் கருப்பு சட்டையுடன், கையில் பதாகை ஏந்தியவாறு வந்தார். மேலும் அவர் கூறுகையில், 'தனது வார்டு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்படுகிறது. ஆனால் அந்த ரேஷன் கடையின் கல்வெட்டில் தனது பெயர் பதிக்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி தலைவர், எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை எனவும், பொது நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சியை சார்ந்த கவுன்சிலர்களின் பெயரை போடுவதில்லை எனவும்,' கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பின்னர் அவர் பதாகையுடன் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் முற்றுகை
மேலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பவானி நகராட்சிக்கு உள்பட்ட 7-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியை சார்ந்த பொதுமக்கள் ஏராளாமானோர் ஒன்று திரண்டு நகராட்சி அலவலகத்துக்கு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், 'ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 7-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் நவீன கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இதில் 7 கழிவறைகள் ஆண்களுக்கும், 7 கழிவறைகள் பெண்களுக்கும் என பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு வருகிறது. ஆனால் செப்டிக் டேங்க் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக,' தெரிவித்தனர். மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பொதுமக்கள்க கூறினர். அதற்கு ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல் பதில் அளிக்கையில், 'இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்,' என்றார்.
பரபரப்பு
மேலும் பொதுமக்கள் குறுக்கிட்டு பேசுகையில், 'அந்த கழிவறைக்கு அருகில் பழைய பயோமெட்ரிக் கழிவறைக்காக பயன்படுத்தப்பட்ட செப்டிக் டேங்கில் புதிய கழிவறைகளின் கழிவுகளை இறக்க கூடாது. பழைய செப்டிக் டேங்கை இதுவரை நகராட்சி நிர்வாகம் ஒரு முறை கூட சுத்தம் செய்யவில்லை. அதில் கழிவுகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதில் உள்ள கழிவுகள் அந்த பகுதியில் உள்ள ஓடை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பவானி அந்தியூர் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.
இந்த நிலையில் நகராட்சி கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் முடிந்து. இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.