மும்பை ரெயிலில் என்ஜினீயர் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்- விடுதலையான 5 பேருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு
மும்பை ரெயிலில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதுடன், விடுதலையான 5 பேருக்கு இழப்பீடு வழங்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
மும்பை ரெயிலில் கொலை
மதுரையை சேர்ந்த என்ஜினீயரான ராஜேஷ் பிரபு என்பவர் மும்பையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பை செல்லும் ரெயிலில் பயணம் செய்தபோது, கொலை செய்யப்பட்டார். இதையடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக அதே ரெயிலில் பயணம் செய்த ெரங்கையா, ஜெயக்குமார், ஜெயராம், ரமேஷ் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நெல்லை கோர்ட்டு இவர்கள் 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இழப்பீடு
விடுதலையான 5 பேரும் மதுரை ஐகோர்ட்டில் இழப்பீடு கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அத்துடன் ஜெயக்குமார், ஜெயராம் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் ஜெயக்குமார், சுப்பிரமணியன், ரமேஷ் மற்றும் ெரங்கையா ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சமும், என்ஜினீயரிங் பட்டதாரியான ஜெயராமுக்கு ரூ.30 லட்சமும் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சி.பி.ஐ.க்கு மாற்றம்
அத்துடன், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் திருப்தி இல்லாததால் வழக்கை உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றியும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.