அருணை மருத்துவ கல்லூரியில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரியில் 600 அதிநவீன படுக்கை வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரியில் 600 அதிநவீன படுக்கை வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அருணை மருத்துவக்கல்லூரி
உடல் நலம் காக்கும் மருத்துவ சேவையில் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு காலத்தில் சென்னை, புதுச்சேரி, கோவை, வேலூர் போன்ற மருத்துவ வசதிகள் நிறைந்த ஊர்களுக்கே பெரும்பாலும் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் பெற திருவண்ணாமலை மக்கள் மிகப் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகக் கூடாது என்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகத்தான நோக்கத்தின் அடிப்படையில் திருவண்ணாமலையில் அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு மாபெரும் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
உயர்தர சிகிச்சை
இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலகத் தரத்தில் உயிர் காக்கும் பல்வேறு உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய 1000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவ சிகிச்சைகள் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
14 ஆபரேஷன் தியேட்டர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அதிநவீன உயிர்காக்கும் உயர்சிகிச்சைகள் உலகத்தரத்துடன் குறைந்த கட்டணத்தில் இங்கு அளிக்கப்படுகின்றது.
இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய துளை அறுவை சிகிச்சை, நுரையீரல் அறுவை சிகிச்சை என ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.
பல்நோக்கு மருத்துவமனை
இந்த நிலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். அருணை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் எ.வ.குமரன், மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, கே.என்.நேரு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி முதல்வர் டாக்டர் டி.குணசிங் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தையும், அதில் அமைக்கப்பட்டு உள்ள அதி நவீன படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ உபகரணங்களையும் பார்வையிட்டார்.
கையடக்க மடிக்கணினி
தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கையடக்க மடிக்கணினியை வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், மருத்துவ இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். விழாவில் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் குப்புராஜ், கல்லூரி மனித வள மேம்பாட்டு அதிகாரி சேஷாத்திரி உள்பட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வெளியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.சிவானந்தம், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.வி.தயாநிதி, தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் டி.தட்சிணாமூர்த்தி, ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், சுந்தர், துரைமாமது, மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வேல்முருகன், கே.வி.ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் கே.வி.சேகரன், மாவட்ட துணை செயலாளர் நா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனுவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.