டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அதிரடி சோதனை
டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 46). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 9-ந் தேதி இவருடைய தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனுவை கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனத்தை நடத்திய ஓசூர் அருண்குமார், கிருஷ்ணகிரி நந்தகுமார், சங்கர், பிரகாஷ், பர்கூர் சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த வேலன் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்னை சந்தித்து பேசினர்.
டிஜிட்டல் காயின் வாங்கினால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறினார்கள்.
முதலீடு
மேலும் அவர்கள் நடத்தி வந்த டிஜிட்டல் காயின் நிறுவனத்தில் என்னை ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் முதலீடு செய்ய வைத்தனர். அதில் எனக்கு சிறிதளவு வருமானம் வந்தது. இதை தொடர்ந்து எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் 60 பேரை அதில் முதலீடு செய்ய வைத்தேன். அவர்களுக்கும் சிறிதளவு லாபம் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனம் பெயரில் இணையதள பக்கத்தை ஏற்படுத்தி. எங்களுக்கு லாபம் இருக்கும் தகவலை விளம்பரப்படுத்தினர். அதை நம்பி ஏராளமானவர்கள் அதில் பணத்தை முதலீடு செய்தனர். முதலில் 2 வாரக்காலம் பணம் கொடுத்து விட்டு பின்னர் அந்த இணையதள பக்கத்தை முடக்கி விட்டனர்.
நாடகம்
தற்போது 210 பேர் புகார் கொடுத்துள்ளனர். மேலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அவர்கள் பல கோடி ரூபாய் ஏமாற்றி உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அவர்களிடம் கேட்டபோது 6 பேரும் தங்களுக்குள் மாறி, மாறி போலீசில் புகார் கூறி நாடகமாடி வருகின்றனர்.
எனவே ஆசைவார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மோசடி புகாாில் உள்ளவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
8 இடங்கள்
அதன்படி ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் அருண்குமார் அலுவலகம், கிருஷ்ணகிரி நந்தகுமார், மத்தூர் சங்கர், பிரகாஷ், பர்கூர் சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வேலன் வீடுகள் உள்பட 8 இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 இடங்களிலும், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு இடத்திலும் என மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனைக்கு பிறகு ஓசூர் அலுவலகத்தை போலீசார் சீல் வைத்தனர்.