முல்லை பூ கிலோ ரூ.100-க்கு விற்பனை
முல்லை பூ கிலோ ரூ.100-க்கு விற்பனை விற்கப்படுகிறது.
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, பிச்சி, அரளி, சென்டி உள்ளிட்ட ஏராளமான பூக்கள் சாகுபடி பணிகளில் எண்ணற்ற விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் உற்பத்தி ஆகும் பூக்களை விவசாயிகள், தொழிலாளர்களை கொண்டு அதிகாலை நேரங்களில் பறித்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு மலர் கமிஷன் கடைகளுக்கு கொண்டு சேர்த்தால் மட்டுமே இவற்றை உரிய ஊர்களுக்கு கொண்டு சென்று வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந் நிலையில், தற்போது சிறிய அளவிலான முல்லை பூ வரத்து அதிகரித்து வர தொடங்கி இருக்கிறது. முல்லை பூ சிறிய அளவிலான வடிவமைப்பில் இருப்பதால் இவற்றை கில்லி எடுப்பதும் சிரமம் எனவும் கூறப்படுகிறது. முல்லை பூ அரை கிலோ எடுக்கவே 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். தற்போது முல்லை பூ விலை வீழ்ச்சி கண்டு கிலோ ரூ.100 முதல் ரூ.120 மட்டுமே விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ முல்லை பூ பறிக்க தொழிலாளர்களுக்கு ரூ.30 வரை கூலி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாக, விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வரும் நிலையில், இத்தகைய விலை வீழ்ச்சி விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் இப்படி பூக்கள் உற்பத்தி அதிகரித்து வரும் காலங்களில் விற்பனை விலை வீழ்ச்சியை தடுக்க நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.