முகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்

திருப்புவனம் அருகே முகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-08-09 17:13 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே முகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது முதுவந்திடல் கிராமம். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். பாத்திமா நாச்சியார் என்பவரின் நினைவாக முதுவந்திடல் கிராமத்தில் உள்ள மையப்பகுதியில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் பாத்திமா நாச்சியாரை தெய்வமாக வழிபட்டு வந்தனர். நாளடைவில் இங்கு வசித்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வெளியூர்களுக்கு சென்றனர். தற்போது இந்துக்கள் இங்கு அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முகரம் பண்டிகையின் போது பாத்திமா நாச்சியார் நினைவாக 10 நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கம். திருவிழாவின் போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்த்தல் உள்ளிட்டவைகளுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

முகரம் பண்டிகை

இந்த ஆண்டு விழா கடந்த 31-ந் தேதி தர்காவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-வது நாள் நேர்த்திக்கடன் செலுத்த காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 7-வது நாள் தர்காவில் இருந்து சப்பர பவனியும் நடைபெற்றது. 10-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று முகரம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காப்பு கட்டிய பக்தர்கள் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பூ மொழுவுதல் என்று அழைக்கப்படும் பெண்கள் தலையில் தீ கங்கு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூ மொழுவுதல்

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் தலையில் சேலையை கொண்டு மூடிய நிலையில் பூக்குழி முன்பு அமர வைக்கப்படுவார்கள். அவர்களின் மேல் ஈரத்துணி போர்த்தப்படும். பின்னர் பூக்குழியில் இருந்து தீ கங்குகளை எடுத்து பெண்களின் தலையில் மூன்று முறை தொடர்ந்து கொட்டப்பட்டு பூ மொழுவுதல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொதுமக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கி சென்று மீண்டும் தர்காவுக்கு கொண்டு வந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்