மழைநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மூதாட்டி தர்ணா

மழைநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-02 18:45 GMT

கோத்தகிரி

மழைநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணாவில் மூதாட்டி

கோத்தகிரி கடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா (வயது 70). சமூக சேவை புரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் ஜக்கலோடையில் இருந்து கடைகம்பட்டி செல்லும் சாலையின் இரு புறங்களிலும் உள்ளது. எனவே கல்வெட்டுடன் கூடிய கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்ததால், உடனடியாக கால்வாய் அமைத்து தர வேண்டும் என நேற்று முன்தினம் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அவர் மீண்டும் மனு அளித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த அவர் தனது மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உரிய நடவடிக்கை

உடனடியாக மேலாளர் குமரன், நெடுகுளா ஊராட்சி தலைவர் சுகுணா சிவா, துணைத் தலைவர் மனோகரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் தொடந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகியோர் தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்