எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் சீற்றம்

தனுஷ்கோடி அருகே எம்.ஆர்.சத்திரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

Update: 2023-09-28 18:45 GMT

ராமேசுவரம், 

தனுஷ்கோடி அருகே எம்.ஆர்.சத்திரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

சுற்றுலா பயணிகள்

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதி அவ்வப்போது சீற்றமாக காணப்படும். இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருவதால் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலை மோதி பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்து வருகின்றன.

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் ஆபத்தை அறியாமல் தடையை மீறி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தின் உள்பகுதி வரையிலும் சென்று கடல் சீற்றத்தை வேடிக்கை பார்த்தனர்.

ஆபத்தை உணராமல்

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததோடு கடல் அலையானது துறைமுகத்தில் மோதி பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்ததை பார்க்கும் எண்ணத்தில் ஆபத்தை அறியாமல் துறைமுகத்தின் உள்பகுதி வரையிலும் சென்று செல்பி எடுக்கின்றனர். இதனால் கடல் சீற்றத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் துறைமுகத்திலிருந்து கடலில் விழுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்கும் வகையில் நுழைவு பகுதியில் தடுப்பு கம்பிகளை வைத்து அந்த பாதையை அடைக்கவும், துறைமுக பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல கூடாது என்ற அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்