தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி எம்.பி. இன்று விருப்பமனு
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி. இன்று விருப்பமனு அளிக்க உள்ளார்.;
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, கடந்த 1-ந் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் சமர்பித்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் எம்.பி. மீண்டும் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், வடசென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தன் விருப்ப மனுவை சமர்பித்தார். இவர்கள் உள்பட நேற்றைய தினம் ஏராளமானோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று (செவ்வாய்க்கிழமை) விருப்பமனு அளிக்க உள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் விருப்ப மனுக்களை சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.