வருகிற 16-ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம்

வருகிற 16-ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-09-12 03:23 GMT

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய அந்தஸ்து பெற்ற ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தநிலையில் அடுத்து வரும் பண்டிகை உள்பட பல்வேறு காரணங்களால் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 16-ந் தேதி முதல் மீண்டும் சிறப்பு மலை ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற 16, 30-ந் தேதி, அக்டோபர் 21, 23-ந் தேதியும், ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே வருகிற 18-ந் தேதி, அக்டோபர் 2, 22, 24-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டியில் இருந்து ரெயில் காலை 9.10 மணிக்கு புறப்படும். இதேபோல் குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் வருகிற 17, 18, அக்டோபர் 1, 2-ந் தேதியும், ஊட்டி-குன்னூர் இடையே வருகிற 16, 17, 30 மற்றும் அக்டோபர் 1-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு காலை 8.20 மணிக்கும், ஊட்டியில் இருந்து குன்னூருக்கு மாலை 4.45 மணிக்கும் ரெயில் புறப்படுகிறது.

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளுடன் ரெயில் இயக்கப்படும். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் கூடுதலாக 40 இருக்கைகள் சேர்த்து 80 இருக்கைகளுடனும், 2-ம் வகுப்பில் 140 இருக்கைகளுடனும் இயக்கப்படும். இதுதவிர ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு ரெயில் வருகிற 17 மற்றும் அக்டோபர் 1-ந் தேதி இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்