ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்டமைப்பு குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்
நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
சென்னை:
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை நெசப்பாக்கத்தில் 23 எம்.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1974-ம் ஆண்டு செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் நகரங்களில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித ஆரோக்கியம் இரண்டையும் மோசமாக பாதிக்கிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகின்றது. நீர் ஆதாரங்களை முறையற்ற முறையில் நிர்வகிப்பதற்கும் பங்களிக்கிறது. இது பெரும்பாலும் அப்பகுதியில் அதிகமான நீர் தட்டுபாட்டிற்கு வழிவகுக்கிறது.
எனவே ஜெர்மன் அரசின் முழுமையான நிதியுதவியுடன் நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றியமைப்பது மற்றும் மறு பயன்பாடு 'ஷோகேஸ்இன்' திட்டம், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியாவில் ஒரு அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான கருத்தியல் வடிவமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் எதிர்காலத் திட்டங்களுக்கு உலக அளவில் ஒரு முன்னோடி திட்டமாகச் செயல்படும். மேலும் பயிற்சி நோக்கங்களுக்காகவும் (திறன் மேம்பாடு)பயன்படுத்தப்படும். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்டமைப்புக் குழுவினர் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஹான்ஸ் ஸ்பீத், மைக்கேல் குன், மூத்த விஞ்ஞானி டாக்டர் மார்க் பெக்கெட் ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னைய்யா, சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் ராஜ கோபால் சுன்காரா உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவினை அமைச்சர் கே.என்.நேருவிடம் ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்மைப்பின் குழுவினர் வழங்கினார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.