குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கூடலூர்-கேரளா இடையே குண்டும், குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-07-30 22:45 GMT

கூடலூர்

கூடலூர்-கேரளா இடையே குண்டும், குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

கேரள மாநிலம் திருச்சூர், மலப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் சென்று வருகின்றன. சீசன் காலங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் கூடலூர்-கேரள எல்லையான கீழ்நாடுகாணி தொடங்கி அண்ணா நகர் வரை சுமார் 6 கி.மீட்டர் தூரம் வரை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தார் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே வாகனங்கள் சிரமத்துடன் இயக்கப்படுகிறது. இது தவிர பொதுமக்களும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

புதியதாக அமைக்க வேண்டும்

இதனால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் கீழ்நாடுகாணி, நாடுகாணி பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முயன்றனர். இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி கடந்த ஆண்டு நாடுகாணியில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் புதியதாக சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள 6 கி.மீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமாக கிடந்த சாலை சீரமைக்கப்பட்டது. இந்தநிலையில் சாலை மீண்டும் மோசமாகி வாகனங்கள் இயக்க முடியாத வகையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, குண்டும், குழியுமான சாலையில் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்