வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

Update: 2022-10-30 17:10 GMT

தமிழகத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதியை மீறும் வாகனங்களுக்கு அபராத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த புதிய அபராத கட்டணம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் புதிய அபராத கட்டணம் ஓரிருநாளில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட அபராத கட்டண விவரங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேலூர் மாநகரில் உள்ள ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பேசுகையில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி ஆவணங்கள் இல்லாமலோ, சீருடை அணியாமலோ, தடைசெய்யப்பட்ட இடத்தில் எதிர்திசை நோக்கி வந்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சிக்னலை பின்பற்றாவிட்டால் ரூ.1,000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். எனவே ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஆட்டோ சங்க நிர்வாகிகள் இதுகுறித்து தங்கள் சங்கத்தில் உள்ளவர்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதேபோன்று இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் வழங்கி போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்றும்படி அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்