வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்
விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிகம் விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு தடைகள், வேகத்தடைகள், ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், தடுப்பு சுவர்கள் போன்ற பல்வேறு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகள் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதாலும், சாலை விதிகளை முழுமையாக பின்பற்றாமலும், தலைக்கவசம் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குவதாலும் விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.
முழு ஒத்துழைப்பு
விபத்தினால் ஒருவர் இறக்க நேரிட்டால், அவரை சார்ந்துள்ள குடும்பமே பாதிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. விலை மதிப்பற்ற உயிரை பாதுகாக்க வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். எனவே வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு விபத்துக்கள் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்காக முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.