மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; 2 பேர் பலி- 2 பேர் படுகாயம்

வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-14 08:49 GMT

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல்-சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனை சாவடி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மெய்யூர் காலனியை சேர்ந்த தியாகு (வயது 30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் (30) என்பவர் படுகாயம் அடைந்தார்.

இவர்களுக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கல்பட்டு காலனியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் வந்த அதே ஊரைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வெங்கல் போலீசார் விரைந்து, பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்