மோட்டார் சைக்கிள்கள் மோதி 4 பேர் படுகாயம்
வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்களான நித்தியானந்தம், ஆனந்தகுமார், ராமராஜ் ஆகிய 4 பேரும் அய்யலூரில் உள்ள வண்டி கருப்பணசாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை பைபாஸ் பிரிவு அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த நித்தியானந்தம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.