மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
தரகம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெற்கு அம்மாபட்டியை சேர்ந்த தேக்கமலை. இவரது மகன் திவாகர் (வயது 19). இவர் சம்பவத்தன்று கடவூரில் ஒரு கோவிலில் நடந்த திருவிழாவிற்கு செல்வதற்கான தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள முள்ளிப்பாடியை சேர்ந்த பெருமாள் மகன் நாச்சிமுத்து (19) தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில், மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாைற அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திவாகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிகிச்சை
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நாச்சிமுத்துவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மேல்சிகிச்சைக்காக கரூர்-திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து திவாகரின் தாய் தேவி கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.