ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் கைது

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-07-07 06:06 GMT

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 22). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தந்தையை காண சென்றார். இதற்கிடையே அவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரையடுத்து, பூக்கடை துணை கமிஷனர் மகேஸ்வரன் மற்றும் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு ஆகியோரின் உத்தரவின் பேரில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி மற்றும் சித்தார்த் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ பதிவுகளை கொண்டு திருடனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிளை திருடிய நபர் மீண்டும் அடுத்த நாள் ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி திரிந்ததை போலீசார் கவனித்தனர்.

இதையடுத்து அவரையும், அவருடன் வந்த மற்றொரு நபரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (28) மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அசாருதீன் (28) என்பதும் தெரியவந்தது.

மேற்கொண்டு நடந்த விசாரணையில் இவர்களின் கூட்டாளிகளான எழில்நகரை சேர்ந்த பயாஸ் (29), மாதவரத்தை சேர்ந்த ராஜசேகர் (28) மற்றும் அஜித் (28) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பல் சென்னையில் உள்ள பல இடங்களில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார், வெவ்வேறு இடங்களில் திருடப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களை, விசாரித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்