விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-09-03 22:26 GMT


விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வலியுறுத்தியுள்ளார்.

குடிநீர் பிரச்சினை

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகரில் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வராத நிலையில் பயன்பாட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்திலும் பயணிகளுக்கு தேவையான நிரந்தர குடிநீர் வசதி செய்யப்படாத நிலை நீடிக்கிறது. மேலும் நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோக நாட்கள் குறைக்கப்படாமல் பொதுமக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் நகராட்சி பகுதிக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்தாண்டு டிசம்பர் மாதமே பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் முடிவடையாத நிலை நீடிக்கிறது.

சாலை பாதிப்பு

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் திட்டப்பணியை விரைந்து முடிப்பதில் போதிய தீவிரம் காட்டாத நிலை நீடிக்கிறது.

மேலும் நகரில் ெரயில்வே பீடர் ரோடு, புல்லலகோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வாகன போக்குவரத்துக்கு தகுதி இல்லாத நிலையில் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளும், முதியவர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் மழை நேரங்களில் பள்ளங்களில் நீர் தேங்கி வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்கிறது.

நடவடிக்கை

எனவே விருதுநகர் நகராட்சி நிர்வாகம் பழைய பஸ் நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், சேதமடைந்த பிரதான சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகமும் விருதுநகருக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்