மோட்டார் சைக்கிள் சாலை ஓர பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் சாவு

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் சாலைஓர பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக பலியானார்.

Update: 2023-06-06 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே மாமனார் வீட்டில் இருந்து மனைவியை பார்த்து விட்டு திரும்பி கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் சாலைஓர பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வாலிபர்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் அதிர்ஷ்ட குமார் (வயது 22). இவருக்கு கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சிவகிரியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அதிர்ஷ்டகுமார், மனைவியை மாமனார் வீட்டில் விட்டு வந்துள்ளார். அவ்வப்போது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை அவர் பார்த்து வந்துள்ளார்.

மனைவியை பார்த்துவிட்டு...

இதேபோன்று நேற்று முன்தினம் இரவு சிவகிரிக்கு சென்று மனைவியை பார்த்துவிட்டு அதிர்ஷ்டகுமார் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பசுவந்தனை அருகில் உள்ள வளைவில் வரும்போது திடீரென்று நிலை தடுமாறி மோட்டாா் சைக்கிளுடன் பள்ளத்தில் அவர் விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் அவர் விழுந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலையில் அப்பகுதியில் சென்றவர்கள் சாலைஓர பள்ளத்தில் அதிர்ஷ்டகுமார் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்தது குறித்து பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதை தொடர்ந்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அதிர்ஷ்டகுமார் இறந்து விட்டது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை பார்த்து கர்ப்பிணி மனைவியும், குடும்பத்தினர், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்