மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு; உறவினர்கள் சாலை மறியல்

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-05 18:04 GMT



ஆரணி

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் தரணிகுமார் (வயது 31). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2-ந்தேதி ஊருக்கு வந்த அவர் நள்ளிரவில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தார்.

இதனையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலையில் தரணிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இறந்த பிறகுதான் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தரணிகுமார் குடும்பத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல்

தகவல் அறிந்ததும் 3 நாட்களாக மருத்துவமனையில் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துள்ளார் என்றும், விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறியும் நேற்று மாலை 5 மணி அளவில் ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலையில் வெள்ளேரி கிராமத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபுதீன் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இறந்த தரணிகுமாருக்கு சுகன்யா என்ற மனைவியும், லக்‌ஷன் (1½), திவ்வேஷ் (6 மாதம்) என 2 மகன்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்