இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தோகைமலை அருகே இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதல்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே நாகனூர் பகுதியை சேர்ந்த சாமிநாதன். இவரது மகன் சண்முகநாதன் (வயது 33). இவர் சம்பவத்தன்று சொந்த வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் தோகைமலைக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை வாங்கி விட்டு அதே மோட்டார் சைக்கிளில் நாகனூருக்கு வந்து கொண்டிருந்தார்.
தோைகமலை-பாளையம் மெயின் ரோட்டில் மேட்டுப்பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது திடீரென்று சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக சண்முகநாதன் பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பில் பயங்கரமாக மோதியது.
பலி
இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சண்முகநாதன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சண்முகநாதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து சண்முநாதன் அண்ணன் முருகேசன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.