திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்து:ஆட்டோவில் சென்ற 11 மாணவர்கள் காயம்

திருமங்கலம் அருகே ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதி 11 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

Update: 2023-08-11 20:40 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதி 11 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.

ஆட்டோ கவிழ்ந்தது

திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம், வலையபட்டி ஆகிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 11 பேர் கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்கு ஆட்டோவில் சென்றனர். அந்த ஆட்டோ கே.வெள்ளாகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் ஆட்டோவை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். மேலும் அதில் இருந்த இந்துஜா(வயது 10), பகதீஷ் ஸ்ரீ, சரண் (9), முத்தமிழ், அன்பு (10), பன்னீர்செல்வம் (12), கவிதா (12), ஆதீஸ்வரன் (12), கார்த்திகா (11), நாகலட்சுமி (12), சாதனா (11) ஆகிய 11 பேர் காயமடைந்தனர்.

மாணவ, மாணவிகள் காயம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், இந்துஜா, கவிதா உள்பட 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதேபோல் ஆட்டோ டிரைவர் பொன்னையம்பட்டியை சேர்ந்த பெருமாளும், மோட்டார்சைக்கிளில் வந்த விருதுநகரை சேர்ந்த பூபதியும் காயம் அடைந்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்