மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 2 பேர் பலி
வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 80). அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு (50). ராமசாமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தங்கராசு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராமசாமி மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தங்கராசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், ராமசாமி திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமசாமி, தங்கராசு ஆகியோர் நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.