மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

Update: 2022-09-07 12:14 GMT

போடிப்பட்டி

உடுமலை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா நெகமம் சேரிப்பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உடுமலையில் நடந்த உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அருண்குமார் மோட்டார் சைக்கிளில் உடுமலை வந்துள்ளார்.

திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் சேரிப்பாளையம் வந்து கொண்டிருந்தார். இவருடைய மோட்டார் சைக்கிள் உடுமலை- பெதப்பம்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தது. குறுஞ்சேரி பாலம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரோட்டின் வலதுபுறம் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அருண்குமாரின் தலை பக்கத்து தோட்டத்தில் போடப்பட்டிருந்த கம்பி வேலியிலிருந்த கல் தூணில் பலமாக மோதியது.

பலி

இதில் தலையில் பலத்த காயமடைந்த அருண்குமார் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அப்போது அந்தவழியாக வந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்