மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி

கீழ்வேளூரில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தாய்-மகன் பரிதாபமாக பலியானார்கள்.

Update: 2023-01-31 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூரில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தாய்-மகன் பரிதாபமாக பலியானார்கள்.

வெளிநாட்டில் வேலை

திருவாரூர் மாவட்டம் அலிவலம் ஊராட்சி சுந்தரவிளாகம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி சுந்தரம்பாள்(வயது 75). இவர்களுடைய மகன் கணேஷ்(35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.நேற்று கணேஷ், தனது தாயார் சுந்தரம்பாைள மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பஸ் மோதி தாய்-மகன் பலி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள வளைவில் அவர் திரும்பியபோது எதிரில் நாகூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கணேஷ் மற்றும் அவரது தாயார் சுந்தரம்பாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் பலியான தாய்-மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்