தாராபுரம் அருகே பண்ணை குட்டையில் தவறி விழுந்த தாய்-மகன் இருவர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

தாராபுரம் அருகே பண்ணை குட்டையில் தவறி விழுந்த தாய்-மகன் இருவர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.;

Update: 2022-10-16 15:40 GMT

தாராபுரம்

தாராபுரம் அருகே பண்ணை குட்டையில் தவறி விழுந்த தாய்-மகன் இருவர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாய்-மகன்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரம் கிராமம் சின்னபுத்தூர் மைனர் காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). விவசாயி. இவரது மனைவி சந்திரகலா (30). இவர்களது மகன் வினோதர்ஷன் (8). இவன் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

சக்திவேலுக்கு ஊரின் அருகில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சோளம் சாகுபடி செய்துள்ளார். இந்த சோளப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு 12 அடி ஆழமுள்ள செயற்ைக பண்ணை குட்டை அமைத்துள்ளார். இந்த குட்டை எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். சோளப்பயிருக்கு தண்ணீர் தேவைப்படும்போது குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து பாய்ச்சி வந்தனர்.

இந்த நிலையில் சோளத்தட்டைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று சக்திவேல், அவருடைய மனைவி சந்திரகலா ஆகியோர் சென்றனர். பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிறுவன் வினோதர்ஷனையும் தோட்டத்திற்கு அழைத்து சென்றனர். தோட்டத்திற்கு சென்றதும் சக்திவேல் மற்றும் சந்திரகலா இருவரும் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.

குட்டையில் மூழ்கி சாவு

அப்போது பண்ணைக்குட்டையில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து குட்டையின் அருகே இருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக தாய் சந்திரகலா மற்றும் மகன் வினோதர்ஷன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது வினோதர்ஷன் கால்தவறி குட்டையில் விழுந்து சத்தம் போட்டான். இதைக் கேட்ட தாய் சந்திரகலா மகனை காப்பாற்றுவதற்கான முயற்சியில் குட்டையில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் குட்டையின் கரைப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கவரை பிடித்து விடலாம் என்று நீண்ட நேரம் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியாத நிலையில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

மின்மோட்டாரை நிறுத்துவதற்காக சென்ற மனைவியையும், மகனையும் காணவில்லையே என்று, சக்திவேல் குட்டைக்கு சென்று பார்த்தார். அப்போது தாய், மகன் இருவரும் குட்டையில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் குட்டையில் இருந்து மேலே கொண்டு வந்தனர். அப்போது சந்திரகலா இறந்துவிட்டது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோதர்ஷனை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி வினோதர்ஷனும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பண்ணை குட்டையில் தவறி விழுந்து தாய்-மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்