பிரசவத்தின் போது தாய், குழந்தை சாவு
திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாய், குழந்தை இறந்தது. டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இறந்ததாக போலீசில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்;
திண்டிவனம்
தச்சு தொழிலாளி
திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள ஏந்தூர் புதிய காலனியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 29). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரகியா(5), சிவானி(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 3-வதாக கா்ப்பம் அடைந்த சந்தியா, பிரம்மதேசம் துணை சுகாதார நிலையத்தில் உடல் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான நிலையில் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வயிற்றில் இருந்த குழந்தையின் எடை கூடுதலாக இருப்பதாகவும், இங்கு குழந்தை பிறப்பது கடினம் என்றும் கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
குழந்தை இறந்து பிறந்தது
அங்கு கடந்த 6-ந் தேதி காலை சந்தியாவுக்கு பிரசவம் நடைபெற்றது. குழந்தை எடை அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் தான் தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும் என்று கூறி அறுவை சிகிச்சைக்காக சந்தியாவின் கணவர் சவுந்தர்ராஜனிடம் கையெழுத்து வாங்கினர்.
பின்னர் சந்தியாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை இறந்து பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த குழந்தையின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். தொடர்ந்து சந்தியா 2 நாள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியல் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தலைசுற்றல், மயக்கம், வாந்தி ஏற்பட்டதால் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
தாயும் இறந்த பரிதாபம்
பின்னர் அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சந்தியா சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து சவுந்தர்ராஜன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த நிலையில் தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் இறந்ததாகவும், இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோசணை போலீஸ் நிலையத்தில் சவுந்தர்ராஜன் புகார் கொடுத்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், திண்டிவனம் தொகுதி செயலாளர் வக்கீல் பூபால், திண்டிவனம் நகர செயலாளர்கள் இமயம், எழிலரசன், காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.