குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தாய் மற்றும் 2 மகள்கள் - போலீசார் விசாரணை
அன்னவாசல் அருகே தாய் மற்றும் 2 மகள்கள் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் மலையடிகுளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை நோக்கி நேற்று மதியம் புதுக்கோட்டையில் இருந்து ஒரு பேருந்தில் சித்தன்னவாசல் வந்து இறங்கிய பெண் ஒருவர் இரண்டு சிறுமிகளுடன் நடந்து சென்றுள்ளார்.
இதனை அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் கவனித்துள்ளார். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகும் அவர்கள் திரும்பி வராததால் சந்தேகமடைந்த இளைஞர் இதுகுறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது குளத்தில் நீரில் மிதந்தவாறு ஒரு சடலம் தெரிந்தது. இதையடுத்து அந்த சடலத்தை மீட்டபோது மேலும் இரண்டு இளம் பெண்கள் என 3 உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது மூவரும் இடுப்பில் துப்பட்டாவால் கட்டியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழி அரசு சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆலங்குடி வட்டம் மாஞ்சான்விடுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரிக்கண்ணு (வயது40). கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு கோபிகா (17), தீவிகா (15), தரணிகா (12) ஆகிய மகள்கள் உள்ளனர்.
இதில் தீவிகா அரிமளத்தில் உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும், கோபிகா, தரணிகா ஆகிய இருவரும் மாஞ்சான்விடுதி அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில், சித்தன்னவாசல் அருகே உள்ள பாறை பள்ளத்தில் இருந்து மாரிக்கண்ணு, கோபிகா மற்றும் தரணிகா ஆகிய 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது