கள்ளக்காதல் விவகாரத்தில் தாய், 2 குழந்தைகள் கொடூர கொலை: தலைமறைவான வடமாநில கொலையாளி கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வடமாநில கொலையாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-20 09:44 GMT

கள்ளக்காதல்

பொன்னேரியை அடுத்த ஜெகனாதபுரம் கிராமத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துவர்க்காபார் (வயது 30) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சுமித்ராபார் (21) என்ற மனைவியும், சிவா (4) மகனும், ரீமா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் தனியார் கம்பெனியில் வேலை பாா்த்து வந்த துவர்க்காபாருடன் பீகாரை சேர்ந்த குட்டு சாஹணி (25) என்பவர் நட்பாக பழகி வந்தார். திருமணமாகாத குட்டுலு அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்த நிலையில் அடிக்கடி துவர்க்காபாரின் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது துவர்க்காபாரின் மனைவி சுமித்ராபாருடன் குட்லுவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் துவர்க்காபாருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி சுமித்ராபாரையும் குழந்தைகளையும் குட்டு அழைத்து சென்ற நிலையில் சுமித்ராபாருவின் மகன் சிவா, மகள் ரீமா ஆகியோரை கொடூரமான முறையில் கொலை செய்தார். சுமித்ராபார் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

கொலையாளி கைது

இதுகுறித்து அறிந்த சோழவரம் போலீசார் உயிருக்கு போராடிய சுமித்ராபாரைப் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த 2 குழந்தைகளையின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில், உல்லாசத்துக்கு தொந்தரவாக இருந்ததால் சுமித்ராபாரின் 2 குழந்தைகளையும் கொன்று விட்டு பின்னர் ஏற்பட்ட தகராறில் சுமித்ராபாரை அரிவாளால் வெட்டி விட்டு குட்டு சாஹணி தப்பிச்சென்றது தெரியவந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுமித்ராபாரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சோழவரம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் தாய் மற்றும் 2 குழந்தைகளை கொன்று விட்டு தலைமறைவான கொலையாளி குட்டுலு சாஹனியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதையடுத்து ஜனப்பன்சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த குட்டுசாஹனியை சோழவரம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்