கல்பாக்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு
கல்பாக்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் பரிதாபமாக இறந்தார்.;
மஞ்சள் காமாலையால் சாவு
புதுச்சேரி முத்திரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரராகவன், இவரது மகன் சுதாகர் என்கிற செந்தில்முருகன் (வயது 38). விவசாயி. கடந்த 9 மாதமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம் இரண்டும் பழுதானது. மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகமிருந்த காரணத்தால் சரியாக உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தார். பிறகு நாட்டு மருந்து மூலம் நோயின் வீரியத்தை குறைக்காலம் என்று எண்ணிய செந்தில்முருகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்பாக்கம் அருகில் கூவத்தூர் அடுத்துள்ள பெருந்துறவு கிராமத்தில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு தனது தாய் சிவகாமி (70) உடன் வந்து தங்கினார்.
நேற்று தனது தம்பி வீட்டில் மருந்து சாப்பிட்டுவிட்டு செந்தில்முருகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி கும்பிடுவதற்காக தூங்கி கொண்டிருந்த மகனை தாய் சிவகாமி எழுப்பியுள்ளார். அவர் எழுந்திருக்காமல் இருக்கவே அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தார். அப்போது அவர் தூக்கத்திலேயே இறந்திருப்பது தெரிய வந்தது.
தாயும் உயிரிழந்தார்
மகன் இறந்த அதிர்ச்சியில் கதறிய தாய் சிவகாமியும் மயங்கி விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இறந்த செந்தில்முருகனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் உள்ள முத்திரப்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் தாய், மகன் என அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து வந்த கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து தாய், மகன் என இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.