அதிகமாக தென்படும் இருவாச்சி பறவைகள்
கோத்தகிரி அருகே கிராமத்தில் இருவாச்சி பறவைகள் அதிகமாக தென்பட்டு வருகின்றன.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கிராமத்தில் இருவாச்சி பறவைகள் அதிகமாக தென்பட்டு வருகின்றன.
இருவாச்சி பறவைகள்
இருவாச்சி பறவை 50 ஆண்டுகள் வாழ்நாளை கொண்டது. இதன் அலகுக்கு மேல் கொம்பு போன்ற அமைப்பு உள்ளது. அது பார்ப்பதற்கு அலகின் மேல் மற்றொரு அலகை பொருத்தி வைத்ததுபோல் காட்சி அளிக்கிறது. இருவாச்சி பறவை 95 முதல் 130 ெச.மீ. (4 அடி) நீளம் கொண்டது. இறக்கையை விரித்த நிலையில் 152 செ.மீ. (5 அடி) அகலம் கொண்டது. இதன் எடை 2 முதல் 4 கிலோ வரை இருக்கும். ஆண் பறவையை விட, பெண் பறவை சற்று சிறியதாக இருக்கும்.
இந்த பறவை கேரளா மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மாநில பறவையாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருவாச்சி பறவைகள் காணப்படுகிறது. கோத்தகிரி அருகே செம்மனாரை பழங்குடியின கிராம பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இருவாச்சி பறவைகள் வந்து உள்ளன. பறவைகள் வருகை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பறவை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
பறவைகள் ஆர்வலரான ஊட்டியை சேர்ந்த மதிமாறன் கூறியதாவது:-
பறக்கும் ஆற்றல்
பெண் இருவாச்சி பறவை முட்டையிடும் பருவத்தில், ஆண் பறவையுடன் சேர்ந்து, மரத்தை தேர்வு அங்கு கூடு அமைத்து தங்கும். பெண் பறவை உள்ளே சென்றதும், மேற்பகுதியை இலை, தழைகளை கொண்டு ஆண் பறவை மூடி விடுகிறது. பின்னர் முட்டையிட்டு, அதில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து பறக்கும் வரை பெண் பறவையா இரை தேட செல்வதில்லை. ஆண் பறவைதான், பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவை தேடிக் கொண்டு வந்து கொடுக்கும்.
பெண் பறவை 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். குஞ்சு பறக்க 3 மாத காலம் ஆகும். குஞ்சுகள் தாமாகவே பறக்கும் ஆற்றலை பெற்றது. அதோடு சேர்ந்து பெண் பறவையும், ஆண் பறவையும் சுதந்திரமாக பறக்க தொடங்கி விடும். ஒருவேளை பெண் பறவை மர பொந்தில் இருந்து வெளியே வரா விட்டால், அது இறந்ததாக கருதி ஆண் பறவையும் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் குணாதிசயம் கொண்டது. பழங்கள், சிறிய பூச்சிகள், சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.