விளைச்சல் அதிகரிப்பால் முருங்கை விலை கடும் வீழ்ச்சி
அரவக்குறிச்சி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முருங்கை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.;
முருங்கை சாகுபடி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக முருங்கை விவசாயம் இங்கு பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை என மூன்று வகையான விவசாய முறைகள் முருங்கை உற்பத்தியில் கையாளப்பட்டு வருகிறது. முருங்கை உற்பத்திக்காக விதை விதைத்து முருங்கை உற்பத்தியும், முருங்கைக்கன்று நட்டுவைத்து முருங்கை உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது.
விலை வீழ்ச்சி
முருங்கை விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் போது அதன் பருவகாலம் எட்டுவதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகும். முருங்கை கன்று வாங்கி விதைத்தால் 7 மாதத்தில் பயன் தர துவங்கும். ஒரு கன்று ஒன்று சந்தையில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு வாங்கி விதைத்து முருங்கை விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது.
தற்போது முருங்கை மரங்கள் பூத்து காய்கள் காய்த்து வங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைகாய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ ரூ.100-க்கு மேல் விலைபோனது. பிறகு மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி உள்ளது. தற்போது 1 கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை விலை போகிறது. காரணம் தற்போது முருங்கை சீசன் தொடங்கி காய்கள் வரத்து அதிகமானது.
விவசாயிகள் கவலை
ஒரு ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளிலிருக்கும் முருங்கை மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்றுவிடுவார்கள். அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கை காய்கள் பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் முருங்கைக்காயை லோடு செய்து அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கை சீசன் தொடங்கி காய்கள் அதிக விளைச்சல் இருந்தும் விலை குறைவாக போகிறது என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் முருங்கை விவசாயத்தையே நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.