10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன

ஆலங்குடியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Update: 2022-09-19 18:23 GMT

ஆலங்குடி

வாழைகள் சாய்ந்தன

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை 4 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளான வம்பன், மைக்கேல்பட்டி, வேங்கிடகுளம், தெட்சிணாபுரம், கொத்தகோட்டை, வெண்ணவால்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வாழை குலையுடன் கீழே சாய்ந்து நாசமாகின. இதனை பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கோரிக்கை

ஆண்டு கணக்கில் உழைத்த உழைப்பிற்கு வருமானம் கிடைக்கும் நேரத்தில் இந்த மழை காரணமாக மொத்த உழைப்பும் வீணாகி விட்டது. ஒவ்வொரு முறையும் தாங்கள் பா திக்கப்படும் போது நிவாரணம் தருவதாக சொல்லும் அதிகாரிகள் அதன் பிறகு நிவாரணத்தை தருவதே இல்லை. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த பல்வேறு வகை மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்