சரக்கு வாகனத்தில் மொபட் மோதி தந்தை- மகன் காயம்

ஓமலூர் அருகே சரக்கு வாகனத்தில் மொபட் மோதி தந்தை- மகன் காயம் அடைந்தனர். போலீசாரால் விபத்து ஏற்பட்டதாக சாலை மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-06 20:21 GMT

ஓமலூர்

ஓமலூர் அருகே சரக்கு வாகனத்தில் மொபட் மோதி தந்தை- மகன் காயம் அடைந்தனர். போலீசாரால் விபத்து ஏற்பட்டதாக சாலை மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலி தொழிலாளி

ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி ஆசாரிப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மைலி (32). மகன் பிரதீப் (14). பிரதீப் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலை கருப்புசாமி, மனைவி மைலி, மகன் பிரதீப் ஆகியோருடன் சேலம் இரும்பாலையில் நடந்த கோவில் விழாவுக்கு செல்வதற்காக மொபட்டில் சென்றனர்.

போலீசார் சோதனை

புளியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது ஓமலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருப்புசாமி போலீசாரை பார்த்தும் பதற்றத்தில் அபராதம் விதித்து விடுவார்கள் என கருதி மொபட்டை சர்வீஸ் சாலையில் ஓட்டினார்.

அப்போது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மொபட் மோதியது. இதில் நிலை தடுமாறி கருப்பசாமி, மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் சாலையில் விழுந்து காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலைமறியலுக்கு முயற்சி

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டனர். போலீசார் வாகன சோதனை நடத்தியதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறி அவர்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்