மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டுமென மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-09-13 18:04 GMT

குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையிலான விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும். புதிய மின் இணைப்பு பெறுவதற்கு ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணம், சேவை கட்டணம், வளர்ச்சிக்கட்டணம் இரு மடங்குக்கு மேல் உயர்த்தியதை கைவிட்டு, பழைய முறையில் கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிய மீட்டர் பொருத்த, இடமாற்றம் செய்ய, பழுதடைந்தால் மாற்றுவதற்காக நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மீட்டருக்கு காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம் நிர்ணயிக்க கூடாது.

விவசாய மின் இணைப்பு

வாடகைக்கு குடும்பத்துடன் வீட்டில் குடியிருந்தால் வணிகக்கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும். 2022- 2023-ம் ஆண்டு முதல் 2026-2027 வரை வீட்டு மின் இணைப்பு பெற்றவர்களிடம் ஜூலை 1-ந்தேதி முதல் 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்த முடிவு செய்ததை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 742 மின் இணைப்பு வழங்க இலக்கீடு ஒதுக்கியதில், பெரம்பலூர் மாவட்டத்துக்கு நிர்ணயித்த இலக்கீடு, இதுவரையிலும் எத்தனை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்னும் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

இம்மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக்கோரி தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு, அரசு ஒதுக்கீடு செய்யும் விவசாய மின் இணைப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வெளிநடப்பு

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையிலான நிர்வாகிகள் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்