'மாண்டஸ் புயல்' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புயல் முன்னெச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 'மாண்டஸ்' புயல் மற்றும் மழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என 346 ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளிக்க 26 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்
மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 பகுதிகள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 33 மற்றும் குறைந்த அளவு பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக கண்டறிந்து, இயல்பு நிலை ஏற்படுத்த ஏதுவாக பொக்லின் எந்திரங்கள் 34, ஜெனரேட்டர்கள் 7, பவர் சா 22 மற்றும் 26 ஆயிரத்து 870 மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், ஆயில் என்ஜின்கள், 23 ஆயிரத்து 65 சவுக்கு கம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு குழுவினர்
மேலும், வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்து துறை அலுவலர்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை கலெக்டர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளனர். மேலும் பேரிடர் நிலைமையினை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டு, சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அறிவுறுத்தல்
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் புயல் மழை காலங்களில் பாதுகாப்பாக இருக்கவும், அரசின் எச்சரிக்கைகளை முழுமையாக கடைப்பிடித்து நடக்கவும் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.