குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

திருக்கடையூர்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-23 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகள் அட்டகாசம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி ,மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதியில் பல்வேறு கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குரங்குகள் வீடு மற்றும் கடைகளில் புகுந்து அரிசி, காய்கறி , பழவகைகளை உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

மேலும் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்டவை நடைபெறும். இதனால் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களையும், பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம் ஆகியவற்றையும் குரங்குகள் பறித்து செல்கின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

கூட்டமாக வரும் குரங்குகளை பார்த்து பயத்தில் அங்கும் இங்கும் ஓடும் பள்ளி மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித் திரியும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து, அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்