ஏலக்காய் தோட்டங்களில் குரங்குகள் அட்டகாசம்
ஏலக்காய் தோட்டங்களில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த போடி, ராசிங்காபுரம், தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் மற்றும் கேரள மாநிலம் குமுளி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். அவர்கள் கேரள மாநிலத்தில் வண்டன் மேடு, நெடுங்கண்டம், பூப்பாறை, பைசன்வாலி, மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக ஏலக்காய் தோட்டங்களில் குரங்குகள் புகுந்து செடிகளின் குருத்து, பழங்களை தின்று நாசம் செய்து வருகின்றன. இந்த குரங்குகளை கூலித்தொழிலாளர்களை வைத்து விரட்டினாலும் திரும்பி வந்து விடுகிறது. இதனால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் குரங்குகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.