தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
கோவை,
கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும், தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நிதி திட்டத்தில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும்.
கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது போன்ற வைரஸ் பாதிப்புகள் கோவை உள்பட தமிழகத்தில் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் குரங்கு அம்மை தாக்கம் இல்லை. ஆனாலும் கோவை, மதுரை, திருச்சி விமானநிலையங்களில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களை தேடி செல்லும் மருத்துவ பணியாளர்களும் வீடு வீடாக செல்லும் போது குரங்கு அம்மை பாதிப்பு குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.